வீடுகளை இடித்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதா?!; தேர்தல் வாக்குறுதிகள் தி.மு.க அரசுக்கு நினைவில்லையா!: சீமான் கண்டனம்..!

வீடுகளை இடித்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதா?!; தேர்தல் வாக்குறுதிகள் தி.மு.க அரசுக்கு நினைவில்லையா!: சீமான் கண்டனம்..!



seaman-condemned-the-demolition-of-houses-and-the-force

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் – முல்லைநகர், தென்றல் நகர் பகுதியில் வசித்து வரும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை, அவர்களது வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் குடும்பங்களை, புழல் ஏரியின் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு என்று கூறி திடீரென்று காவல்துறையை ஏவி அச்சுறுத்தி வெளியேற்ற நினைப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

திருமுல்லைவாயில் முல்லைநகர், தென்றல் நகர் பகுதியில் மக்கள் வாழும் இடம் ஏரிக்கரை நிலமென்றால், மக்கள் அங்குக் குடியேறி வாழத் தொடங்கியவுடனேயே அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இருக்கலாமே? குடியிருப்புகள் அமைக்க அவர்களுக்குத் தடைவிதித்திருக்கலாமே? ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு , குடிநீர் இணைப்பு, எரிவாயு இணைப்பு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை எப்படி வழங்கப்பட்டது? வழங்கிய அதிகாரிகள் யார்? வழங்கிய ஆட்சி யாருடையது? அவர்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்றத்துடிக்கும் அதே இடத்திற்கு, இன்றைய ஆட்சியாளர்கள் வாக்கு கேட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஏறி இறங்கும்போதெல்லாம் தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? தற்போதைய ஆவடி மாநகர திமுக மேயர் கடந்த மாநகராட்சித் தேர்தலின்போது இந்த வீடுகளுக்கு பட்டா வாங்கித் தருவேன் என்று எதன் அடிப்படையில் வாக்குறுதி அளித்தார்? தேர்தலில் நின்றபோது ஆக்கிரமிப்பாகத் தெரியாத வீடுகள், மக்களை ஏமாற்றி வென்றபிறகு ஆக்கிரமிப்பாகத் தெரிவது எப்படி?

ஆக்கிரமிப்பென்றால், ஏழைகளின் குடிசை வீடுகளும், எளிய மக்களின் கூரை வீடுகளும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வருவதேன்? ஏன் அவைகள் மட்டும் கண்ணை உறுத்துகிறது? காலங்காலமாக வாழ்ந்த மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து ஆக்கிரமிப்பென்று கூறி, அடித்துத் துரத்துவார்களென்றால் சென்னை பெருநகரில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு கூடங்கள் என எதுவொன்றிலாவது அரசு கை வைத்திருக்கிறதா? வைக்க முடியுமா? சென்னை மாநகரின் பல அரசு கட்டிடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள்தான். அவற்றையெல்லாம் இடித்துத் தகர்த்து, நிலத்தை மீட்டுவிடுமா அரசு?

மண்ணின் மக்களை அவர்களது நிலத்தைவிட்டே திமுக அரசு விரட்டியடிக்கும் என்றால் இதுதான் மக்களுக்கு விடியல் தரும் அரசா? அடித்தட்டு உழைக்கும் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்து சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தங்கள் வாழ்நாள் கனவாக எண்ணிக் கட்டிய வீட்டை இடித்து, அவர்களைக் காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்துவதுதான் சமூக நீதியின்படி நடத்தப்படுகிற திராவிட மாடல் ஆட்சியா? நீண்ட நெடுங்காலமாக நிலைத்து வாழ்ந்து வரும் எளிய அடித்தட்டு மக்களின் வீடுகளை இடித்து, அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் செயல் துளியும் மனச்சான்றில்லாத கொடுங்கோன்மை போக்காகும்.

ஆகவே, முல்லைநகர், தென்றல் நகர் பகுதியில் மக்களின் வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றும் முடிவைக் கைவிட்டு, உடனடியாக அவர்கள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.