எடப்பாடியின் கோட்டையை தகர்க்க களமிறங்கும் சசிகலா!,, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ஓ.பி.எஸ் தரப்பு..!

எடப்பாடியின் கோட்டையை தகர்க்க களமிறங்கும் சசிகலா!,, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ஓ.பி.எஸ் தரப்பு..!



ops-welcomes-sasikala-with-red-carpet-to-demolish-edapp

அ.தி.மு.க வில் தலைமை பதவிக்கான போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரிடையே நேரடி போட்டி நடப்பதாக கருதப்பட்டாலும். இந்த போட்டியில் சசிகலா மறைமுகமாக இறங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த விவகாரத்தில் மாறி மாறி வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்புகளும் வந்துள்ள நிலையில், அ.தி.மு.க தலைமையை கைப்பற்ற சசிகலா அதிரடியாக வியூகம் அமைத்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாளை சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை (12 ஆம் தேதி) காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வரும் சசிகலா, அங்கிருந்து தலைவாசல் சென்று தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

இதனை தொடர்ந்து ஆத்தூர் பேருந்து நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் தொண்டர்களை சந்திக்கும் சசிகலா, இதன் பின்னர் சேலம் 4 ரோடு பகுதி அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். நாளை மறுநாள் 13 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் அரியானூரில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அரியானூரிலிருந்து மகுடஞ்சாவடி, சங்ககரி-எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் வெப்படை, பள்ளிப்பாளையம் பகுதிகளில் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

முன்னதாக சென்னையில் இருந்து கார் மூலம் ஆத்தூர் வழியாக சேலம் வரும் சசிகலாவுக்கு ஆங்காங்கே பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க வின் கோட்டை என்று கருதப்படுவதால் ஜெயலலிதா விசுவாசிகள் தன்னை சந்திப்பார்கள் என்று சசிகலா நம்புவதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில், சசிகலாவின் ஒவ்வொரு நடவைடிக்கையையும் உற்று நோக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சசிகலாவை யாரெல்லாம் சந்திக்கிறார்கள்? அவருக்கு எந்த பகுதியில் அதிக அளவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது என்பது குறித்து ரகசியமாக கண்காணிக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.