இது என் கட்டளை..!! இதுவே சாசனம்..!! தமிழக பா.ஜனதா நிர்வாகிகளை எச்சரித்த ஜே.பி.நட்டா..!JP Nadda has advised BJP executives to follow a smooth relationship with the AIADMK.

அ.தி.மு.கவுடன் சுமூக உறவை பின்பற்றுமாறு பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதவி வகித்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அதற்கு மறு நாளே பா.ஜ.க மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதனை தொடர்ந்து சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா ஐ.டி. அணி நிர்வாகிகள் 14 பேர், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் அனைவரும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக சி.டி.ஆர்.நிர்மல்குமார் அ.தி.மு.கவில் இணைந்த போதே, கூட்டணி தர்மத்தை மீறி பா.ஜனதா கட்சியினரை அ.தி.மு.க இணைத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அடுத்தடுத்த கட்சி தாவல்களால் இரு கட்சிகளின் தலைவர்கள் இடையே அறிக்கை போர் உச்சத்தை எட்டியது.

இதற்கிடையே, ஜெயலலிதா அம்மையார், கலைஞர் கருணாநிதி போன்று நானும் ஒரு ஆளுமை மிக்க தலைவராக இருக்க விரும்புகிறேன் என்றும் பா.ஜனதா கட்சி திராவிட கட்சிகளை நம்பிய காலம் மலையேறிவிட்டது. தற்போது பா.ஜனதாவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன என்று கூறினார். இது அ.தி.மு.கவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி கிருஷ்ணகிரி வந்த பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அ.தி.மு.கவுடன் மோதல் போக்கு வேண்டாம் என்றும், அக்கட்சியினருடன் சுமூக உறவை பின்பற்றுமாறும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளார்.