கிளை செயலாளர் முதல் முதலமைச்சர் வரை: எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷ உரை..!

கிளை செயலாளர் முதல் முதலமைச்சர் வரை: எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷ உரை..!


From Branch Secretary to Chief Minister

வரலாற்று சிறப்பு மிக்க சிறப்பு பொதுக்குழுவில் நாம் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். இந்த தீர்மானங்கள் எதனால் நிறைவேற்றப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.

விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை இந்த மாபெரும் இயக்கத்திற்கு இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்துள்ளீர்கள். அதற்கு நான் நன்றி செலுத்துகிறேன். சிலுவம்பாளையத்தில் பிறந்த நான் அ.தி.மு.க வின் ஆதரவாளராக வளர்ந்தேன். 1974 ஆம் ஆண்டு கிளைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றேன்.

நான் வசித்த பகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. அ.தி.மு.க கொடிக் கம்பத்தை நடுவேன், அதனை காங்கிரஸ் கட்சியினர் பிடுங்கி எறிந்து விடுவார்கள். அவ்வளவு வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சியினை எதிர்த்து அரசியல் பணியாற்றினேன். ஜெயலலிதாவிடம் இருந்து நல்ல பெயரை பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவருடைய கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் நாம் முத்திரை பதிக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய அருட்கடாச்சம் கிடைக்கும்.

என்னுடைய கட்சி பணியைப் பார்த்து சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளை ஜெயலலிதா வழங்கினார். அ.தி.மு.க.வுக்கு எவ்வளவோ பிரச்னைகள் வந்தன. கட்சிக்காக உழைப்பவர்கள் எப்போதும் வெளியேற மாட்டார்கள். எட்டப்பன் வேலை பார்ப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான் அதிக ஆண்டுகள் நடைபெற்றுள்ளது.

அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. ஒரு மாதம் கூட இந்த ஆட்சி நிலைக்காது என கூறிய ஸ்டாலினே அதிர்ந்து போகும் அளவுக்கு நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளோம். அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை  வேண்டும் என்பது மக்களின் எண்ணம். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஓ.பன்னீர்செல்வத்தின் தவறு. இதற்கு நாம் பொறுப்பாக முடியாது என்று பேசினார்.