அடுத்தடுத்து அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை..!

அடுத்தடுத்து அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை..!



Edappadi Palaniswami paid respects at the memorials of former Chief Ministers

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்காக எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது.

இன்று வெளியான தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் கூறிய நீதிபதிகள், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இதனை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின்னர் மெரினா கடற்கரைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்மைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அங்குள்ள அண்ணா நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.