"திமுக கனவு பலிக்காது; இனிமே நாங்க தான்..." நெல்லையில் அமித்ஷா சூளுரை.!!



admk-bjp-alliance-rule-tn-union-minister-amit-shah-conf

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லையில் தெரிவித்திருக்கிறார். பாஜக சார்பாக நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்தார். கொச்சினில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு வருகை புரிந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அமித்ஷா, திமுக கூட்டணி தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்தியாவிற்கு ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு அவர்கள் முயற்சி செய்யும் கனவு பலிக்காது என தெரிவித்திருக்கிறார்.

நிச்சயமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு நல்லாட்சியை கொடுக்க பாடுபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி அரசியல் கூட்டணியல்ல என்று கூறிய அமித்ஷா இது தமிழகத்தின் வளர்ச்சிக்கான கூட்டணி எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக பாஜகவை சேர்ந்த இல. கணேசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய அவர் தனது வாழ்நாளை பாஜகவிற்காக அர்ப்பணித்த இல. கணேசனுக்கு வீர வணக்கம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மக்கள நெனச்சா வேதனையா இருக்கு: திமுக கனவு பலிக்காது.." செல்லூர் ராஜு பேட்டி.!!

தமிழகத்தில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழனுக்கு விழா எடுத்து தமிழர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் பிரதமர் மோடி என அமித்ஷா கூறினார். பூத் கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நையினார் நாகேந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பின் தூத்துக்குடி சென்று அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் அமித்ஷா.

இதையும் படிங்க: "2026 தேர்தல் சூரசம்ஹாரம்; பாஜகவை கோவில் போல கட்டியிருக்கிறார் அண்ணாமலை" புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.!!