பெண்களே Self Love சுயநலம் அல்ல.. அடையாளம்.. திருமணத்தால் இழந்ததை மீட்டெடுங்கள்.!



self love is very important for women

இன்றைய கால பெண்கள் கல்வி, தொழில், சமூக சேவை என அனைத்து துறைகளிலும் வெற்றி கொடி நாட்டி வருகின்றனர். ஆனால், அந்த வெற்றியின் பின்னால் தங்களது உடல் மற்றும் சரும நலனில் அக்கறை காட்ட நேரம் இல்லாமல் போகிறது. “முதலில் குடும்பம், பிறகு நான்” என்ற எண்ணம் காரணமாக, தங்கள் ஆரோக்கியம் புறக்கணிக்கப்படுகிறது. இது ஒரு கட்டத்தில் சோர்வு, ஊட்டச்சத்து குறைவு, சரும சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

பெண்களின் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அடிப்படை உணவில் தான் உள்ளது. தினசரி உணவில் புரதம், கால்சியம், நீர்ச்சத்து, இரும்பு போன்ற சத்துக்கள் சமமாக சேர்க்கப்பட வேண்டும். காலை உணவுடன் பழம் அல்லது பழச்சாறு, மதிய உணவில் பச்சை காய்கறி இவை தினமும் பழக்கமாக இருந்தால் சருமம் இயற்கையாகப் பளபளக்கும். பிஸியான வாழ்க்கையிலும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கத்தை பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

பார்லர், கெமிக்கல் கிரீம், பவுடர் இவை தற்காலிக அழகு மட்டுமே தருகின்றன. ஆனால் நீண்டகால அழகைத் தருவது இயற்கை பொருட்கள்தான்.

இதையும் படிங்க: ஸ்லோ பாய்சனா.? சோஷியல் மீடியாவா.? கொஞ்சம் விழித்து பாருங்க.! 

self love

மஞ்சள், துளசி, வேப்பிலை, கடலைமாவு, முல்தானி மட்டி போன்றவை சருமத்தை சுத்தப்படுத்தி பளபளப்பை அளிக்கும். பழமையான விரல் மஞ்சள் தேய்த்தல் போன்ற வழிமுறைகள் இன்னும் பயனுள்ளதாகவே உள்ளன.

வெளியே செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து முகம் மற்றும் கைகளை மறைக்கும் துணிகளை அணிவது சிறந்த பழக்கம். இது வெயில் பாதிப்பு, கருவளையம், உலர்ச்சி போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. உடல் வெளிப்புற அழகுடன், உள்ளார்ந்த அமைதி, தூக்கம், தண்ணீர் அருந்தும் பழக்கம் போன்றவை இணைந்தால் தான் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.

பெண்கள் தங்கள் உடல், மனநிலை, சருமம் ஆகியவற்றில் காட்டும் அக்கறை சுயநலம் அல்ல. அது அவசியம். ஒரு பெண் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருந்தால் தான், ஒரு குடும்பம், அதன் வழியே ஒரு சமுதாயம் நலமாக இருக்கும் என்பதை நாம் மறக்க கூடாது.