கொரோனா ஒருபக்கம் மிரட்டும் நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் அரங்கேறிய 3 கோர விபத்துகள்!
கொரோனா ஒருபக்கம் மிரட்டும் நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் அரங்கேறிய 3 கோர விபத்துகள்!

கொரோனாவின் பிடியில் இந்திய சிக்கி தவிக்கும் நிலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய கோர விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் அருகே கோபாலபுரத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் இன்று அதிகாலை திடீர் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயு கசிவால் அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள், சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்கள் என 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்ததாக இன்று மதியம் சத்தீஸ்கர் மாநிலம், ராய்கார்க் நகரில் இயங்கி வரும் தனியார் காகித ஆலை ஒன்றில் வாயு கசிந்ததில் தொழிலாளர்கள் 7 பேர் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் குன்றிய அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதனை தொடர்ந்து இன்று மாலை தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 7 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.