மும்பை நகைக்கடையில் போலி ரெய்டு மூலம்... 3 கிலோ தங்கம் 15 லட்சம் சுருட்டி சென்ற கொள்ளையர்கள்...!
மும்பை நகைக்கடையில் போலி ரெய்டு மூலம்... 3 கிலோ தங்கம் 15 லட்சம் சுருட்டி சென்ற கொள்ளையர்கள்...!

மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து நான்கு கொள்ளையர்கள், நகை வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் 3 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 லட்சம் பணத்தை சுருட்டிச் சென்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சவேரி பஜார் பகுதியில் தங்க வியாபாரம் செய்யும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன் தினம் மூன்று ஆண்கள், ஒரு பெண் என நான்கு பேர் பரபரப்பாக அந்நிறுவனத்தின் உள்ளே நுழைந்துள்ளனர்.
முகப்பில் இருந்த வரவேற்பாளரை தாக்கி நாங்கள் அமலாக்கத்துறையில் இருந்து ரெய்டுக்காக வந்துள்ளோம் அலுவலகம் எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது எனக் கூறியுள்ளனர்.
நான்கு பேரும் ஐடி கார்டுகளை காட்டி அங்கு பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பிறகு உங்கள் முதலாளி விராட் மாலி எங்கே எனக் கோபமா கேட்டுள்ளனர்.
மேலும் நிறுவன ஊழியர்களிடம் இருந்து சாவிகளை பிடுங்கி சோதனையிட்டு அங்கிருந்து 3 கிலோ நகை மற்றும் ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர். அருகே இருந்த அந்த நிறுவனத்தின் பழைய அலுவலகத்திற்கு, ஊழியர்களுக்கு விலங்கு மாட்டி அங்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறிது நேரம் விசாரணை செய்வது போல் நடித்துவிட்டு, சாட்சியங்களை வாக்குமூலமாக வாங்கப் போகிறோம். அதுவரை காத்திருங்கள் என சொல்லி பறிமுதல் செய்த மூன்று கிலோ தங்கம் மற்றும் ரூ.15 லட்சம் பணத்துடன் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி
நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் திரும்பி வராததால் நிறுவன மேனேஜருக்கு சந்தேகம் வரவே போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். அப்போது தான் அவர்கள் ஏமாற்றப்பட்டதும், அந்த நான்கு போரும் கொள்ளைக்காரர்கள் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் டோங்க்ரி, மல்வானி ஆகிய பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகள், விசாகா முதாலே என்ற பெண், முகமது பாசல், முகமது ரபிக் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தையும், தங்கத்தையும் மீட்டுள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஏழு நாள் போலீஸ் விசாரணைக்கு காவலில் எடுக்கப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் நான்காவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.