தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள்... கொலை வெறி தாக்குதல்... இந்திய கடற்பகுதியில் நடந்த அராஜகம்...!!
இலங்கை கடற்கொள்ளையர்கள், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாகையில் உள்ள நம்பியார் நகரைச் சேர்ந்த முருகன் கடந்த 14 ஆம் தேதி தனக்கு சொந்தமான ஃபைபர் படகில் 6 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே இந்திய கடல் எல்லைப்பகுதியில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தெரிந்தது மட்டுமின்றி, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்று விட்டதாக தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்களை சகமீனவர்கள் புஷ்பவனம் கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்திய கடற்படையில் இலங்கை கடற்கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலில் விரல்கள் துண்டான மீனவர் முருகன், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மீதமுள்ள ஐந்து மீனவர்களுக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்கொள்ளையர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியது வேதனை அளிப்பதாக நாகை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.