உ.பியில் அதிர்ச்சி.. பிரேத பரிசோதனைக்கு சென்ற சடலம்.. காணாமல் போன கண்கள்.. சிக்கிய மருத்துவர்கள்..!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் வசித்து வருபவர் பூஜா சிங். இவருக்கும் ஜோகேந்திர குமார் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமணம் முடிந்த பிறகு தனது மாமியார் வீட்டில் வசித்து வந்த பூஜா சிங்கை அதிக வரதட்சணை கேட்டு அவரது கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பூஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ஜோகேந்திர குமாரும் அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தனது மகளைக் கொன்று விட்டதாக கூறி பூஜாவின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்த பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனை முடிந்து பூஜாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பூஜா சிங்கின் உடலில் அவரது கண்கள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ததில் பூஜாவின் சடலத்தில் இரண்டு கண்களும் இல்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் முதல் கட்ட பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் முகமது ஆரிப், முகமது உவைஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது உத்திர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.