வேலியே பயிரை மேய்ந்த அவலம்: மருத்துவ கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய போலீசார்..!

வேலியே பயிரை மேய்ந்த அவலம்: மருத்துவ கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய போலீசார்..!


Police men sexual abuse medical college student

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் கலாசார விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விழாவில் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவிகளும் கலந்துகொண்டனர். நேற்று நள்ளிரவில் நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில், ஒரு மாணவி ஜிப்மர் வளாகத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

அந்த இளைஞர்கள், தனியாக நடந்து சென்ற மாணவியை தவறான முறையில் அவரது உடலில் தொட்டு மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இதனால் பதறிப்போன மாணவி, சத்தம்போட்டு உதவிக்கு அழைத்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞர்கள், மீண்டும் மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி சக மாணவர்களிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் விசாரித்ததில், இருசக்கர வாகனத்தில் வந்து மருத்துவ கல்லூரி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாணவி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜிப்மர் வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்ட காவல்துறையினரைஅடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே, மாணவியிடம் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.