ரூ.300 கோடி பிட்காயின் கரென்சிக்காக கடத்தலில் ஈடுபட்ட காவலர்.. 8 பேர் அதிரடி கைது.!
ரூ.300 கோடி பிட்காயின் கரென்சிக்காக கடத்தலில் ஈடுபட்ட காவலர்.. 8 பேர் அதிரடி கைது.!

புனேவில் ரூ.300 கோடி மதிப்புள்ள பிட்காயின் க்ரிப்டோ கரன்சியை அபகரிக்க முயற்சித்து, காவல் அதிகாரி தரகரை கடத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரின் சைபர் கிரைம் பிரிவில், காவலராக பணியாற்றி வருபவர் திலீப் துக்ரம் காந்த்ரே. இவருக்கு விஜய் நாயக் என்ற பங்குச்சந்தை தரகர் ரூ.300 கோடி மதிப்புள்ள பிட்காயின் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ரூ.300 கோடியை அபகரித்தால் விரைவில் வாழ்க்கையில் செல்வந்தராகிவிடலாம் என்று எண்ணிய திலீப், தனது 7 நண்பர்களுடன் சேர்ந்து தரகரை கடத்த திட்டம் தீட்டியுள்ளார். கடந்த 14 ஆம் தேதி தரகர் விஜய் நாயக் கடத்தப்பட்டு இருக்கிறார்.
இந்த தகவலை அறிந்த விஜய் நாயக்கின் நண்பர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதாகிவிடுவோம் என்று அஞ்சிய காவலர் உட்பட கடத்தல் குழு, விஜய் நாயக்கை சாலையில் வீசி தப்பி சென்றுள்ளது.
கடத்தப்பட்ட தரகர் குற்றவாளிகளை அடையாளம் காண்பித்த நிலையில், புனே சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வந்த திலீப் மற்றும் அவரின் நணப்ர்கள் 8 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.