ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைத்த 5.5 மீட்டர் நீளமும், 48 இன்ச் அகலமும் கொண்ட பட்டுச் சேலை..! வெறும் 200 கிராம் எடையில் நெய்து சாதனை படைத்த நெசவாளர்...!!!
தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் நல்லா விஜய் குமார், தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவுக்கு மடிக்கக்கூடிய அரிய பட்டுச் சேலையை நெய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பாரம்பரிய நெசவுக் கலையையும் நவீன நுட்பத்தையும் இணைத்துள்ள அவரது இந்த படைப்பு, கைத்தறி உலகில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.
தீப்பெட்டிக்குள் அடங்கும் முழு நீள சேலை
சுமார் 5.5 மீட்டர் நீளமும் 48 இன்ச் அகலமும் கொண்ட இந்த பட்டுச் சேலை, வெறும் 200 கிராம் எடையே கொண்டுள்ளது. பாரம்பரிய இகாத் வடிவமைப்பில் முழுவதும் கைத்தறி முறையில் நெய்யப்பட்ட இந்த சேலையை உருவாக்குவதற்காக விஜய் குமார் ஒரு வார காலம் தொடர்ந்து உழைத்ததாக கூறப்படுகிறது.
இதன் சிறப்பு, சேலையை நுணுக்கமான மடிப்பு முறைகளின் மூலம் மிகச் சிறிய அளவுக்கு சுருக்க முடிவதில்தான் உள்ளது. முழு சேலையையும் ஒரு சாதாரண தீப்பெட்டிக்குள் வைக்கும் அளவுக்கு மடிக்க முடிவது அவரது தொழில்நுட்ப திறமையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: பா.ஜனதாவில் இணைந்தார் பிரபல நடிகை... அதிரும் அரசியல் களம்...
கனக துர்க்கை அம்மனுக்கு சமர்ப்பிப்பு
தனது இந்த வித்தியாசமான படைப்பை ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள இந்திரகீலாத்ரி கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு விஜய் குமார் கொண்டு சென்றார். அதன்பின், அம்மனுக்கு அணிவிப்பதற்காக ஆலய அதிகாரிகளிடம் பக்தியுடன் சேலையை சமர்ப்பித்துள்ளார்.
தந்தையின் பாதையில் சாதனை
கைத்தறித் துறையில் 'கைத்தறி கலா ரத்னா' விருது பெற்றுள்ள விஜய் குமார், மறைந்த நெசவுக் கலைஞர் நல்லா பரந்தாமுலுவின் மகன் ஆவார். தந்தையின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து புதிய நெசவு நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் என நெசவுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக அவர் நெய்த 'ஆபரேஷன் சிந்தூர்' கருப்பொருளிலான சிறப்பு பொன்னாடை, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டு பாராட்டைப் பெற்றிருந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த கைத்தறி படைப்பு, இந்திய பாரம்பரிய நெசவுக் கலையின் சிறப்பையும் நெசவாளர்களின் திறமையையும் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.