தவறை தடுக்க போன காவலருக்கு நடந்த கொடுமை..! ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு... நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டம் மஸ்வத் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலர் மீது லாரியை ஏற்றிச் செல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான டம்ப்பர் லாரியை மறித்து சோதனை செய்தபோது, காவலர் மகாவீர் கோகரேவை ஓட்டுநர் வாகனத்துடன் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றார். படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையில் சிக்கிய சட்டவிரோத மணல்
மஸ்வத் பகுதியில் காவலர் மகாவீர் கோகரே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பதிவு எண் இல்லாமல் சந்தேகத்திற்கிடமாக வந்த டம்ப்பர் லாரியை அவர் மறித்துள்ளார். வாகனத்தை சோதனையிட்டபோது, உரிய அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்ட மணல் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது.
லாரியில் ஒரு கிலோமீட்டர் இழுத்துச் சென்ற ஓட்டுநர்
இதையடுத்து மணல் கடத்தலுக்கான அனுமதிப் பத்திரத்தை காவலர் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திடீரென லாரியை இயக்கி தப்ப முயன்றபோது, காவலர் கோகரே வாகனத்தின் கதவைப் பிடித்து தடுக்க முயன்றார். ஆனால் லாரியை நிறுத்தாத ஓட்டுநர் வேகத்தை அதிகரித்ததால், சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் காவலர் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டன.
இருவர் கைது; மணல் மாஃபியா குறித்து விசாரணை
காயமடைந்த காவலரை அப்பகுதி மக்கள் மற்றும் சக காவலர்கள் மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சையின்போது சுயநினைவு திரும்பிய பின்னர், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மஸ்வத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சட்டவிரோத மணல் கடத்தல் பின்னணியில் செயல்படும் கும்பல் மற்றும் சம்பந்தப்பட்ட லாரியின் உரிமையாளர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விசாரணையில் இந்த வலையமைப்பில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் பிரம்மாண்ட மலைப்பாம்புடன் குத்தாட்டம் போட்ட பெண்....! உடனே போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை... ஷாக் வீடியோ..!!!