இது நல்ல ஐடியாவா இருக்கே! இனி டிவி பார்க்க வேண்டுமென்றால் படிக்கவும் செய்யணும்..? ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து மகனுக்கே செக் வைத்த சீனத் தந்தை! ஆனால் மகன் போட்ட பலே திட்டம்.. கடைசியில் நடந்ததுதான் ஹைலைட்..!!!



china-ai-tv-study-quiz

தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிய மகனைப் படிக்க வைக்க, சீனாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஷென்சென் நகரைச் சேர்ந்த அவர், தொலைக்காட்சியைத் தடை செய்யாமல் அதையே படிப்புக்கான கருவியாக மாற்றியுள்ளார். இதன்படி, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பாடக் கேள்விக்குப் பதிலளித்தால் மட்டுமே மகனால் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க முடியும்.

மகனின் டிவி ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த தந்தை

வாடகைக் கார் ஓட்டுநராகப் பணியாற்றும் அந்தத் தந்தையின் மகன், இளநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். ஆனால், படிப்பதில் செலவிடும் நேரத்தைவிட தொலைக்காட்சி பார்ப்பதிலேயே மகன் அதிக நேரம் செலவிடுவதாகத் தந்தை கவலைப்பட்டுள்ளார்.

இதைக் கட்டுப்படுத்த முதலில் தொலைக்காட்சியில் இருந்த கேள்வி - பதில் வசதியைப் பயன்படுத்திப் பார்த்துள்ளார். ஆனால், அதிலிருந்து தப்பிப்பதற்கான வழியை மகன் கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரத்தைத் துண்டிக்கும் கருவியையும் பொருத்தியுள்ளார். அந்த முயற்சியையும் மகன் முறியடித்ததால், தந்தைக்கு வேறு வழியைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் திரையில் தோன்றும் பாடக் கேள்வி

இதையடுத்து, AI செயலியின் உதவியுடன் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகு, திரையில் தானாகவே ஒரு கேள்வி தோன்றும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சீன மொழி, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து மகனின் பள்ளிப் பாடத்திட்டத்திற்கு ஏற்ற கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில் அளித்தால் மீண்டும் ஒரு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். சரியான பதில் கிடைக்கும் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடராது.

படிப்பும் பொழுதுபோக்கும் இணைந்த புதிய முயற்சி

இந்த முறையைப் பார்த்து மகன் கோபப்படுவான் என்று தந்தை எதிர்பார்த்துள்ளார். ஆனால், அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் மகனும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். தற்போது கேள்விகளின் கடினத்தன்மையை அதிகரித்து, இந்த அமைப்பை மேலும் மேம்படுத்தவும் தந்தை திட்டமிட்டுள்ளார்.

மகன் இந்த முறையை ஏமாற்றுவதற்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதும், தந்தை அவற்றைச் சரிசெய்வதும் இருவருக்கும் இடையிலான விளையாட்டாக மாறியுள்ளது. தொலைக்காட்சியை முற்றிலும் தடை செய்யாமல், பொழுதுபோக்குடன் படிப்பையும் இணைத்த இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.