முன்னாள் முதல்வரின் இறுதிச் சடங்கில் போலீசாருக்கு நடந்த அவமானம்! துப்பாக்கிகள் வெடிக்காததால் அதிர்ச்சி! வைரல் வீடியோ!



former cm Funeral

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது 82 வயதில் கடந்த திங்கள் கிழமை காலமானார். 

ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல் மந்திரி ஆவார். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார். 19 ஆம் தேதி உயிரிழந்த ஜெகன்நாத் மிஸ்ரா இரண்டு நாட்களுக்கு பிறகு, சுபவுல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

ஜெகன்நாத் மிஸ்ரா முன்னாள் முதல்வர் என்பதால் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்படும் போது போலீசார் வானத்தை நோக்கி 22 முறை சுடுவது வழக்கம். நேற்றும் அதேபோல போலீசார் துப்பாக்கியை தூக்கி வானத்தை நோக்கி சுட்டனர். ஆனால் ஒரு துப்பாக்கியும் வெடிக்கவில்லை. பல முறை முயற்சித்தும் துப்பாக்கியில் இருந்து சப்தம் கூட வரவில்லை.

இறுதிச்சடங்கில் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கி குண்டுகள் வெடிக்காதது குறித்து வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.