ஐயோ.. என்னை மட்டும் ஏன் இப்படி தேடி தேடி வந்து கடிக்குது ..! 20 நாளில் 6 முறை கடித்த கருநாகப்பாம்பு ....! உயிர் பயத்தில் கதறும் இளைஞர்..! பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் 21 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த 20 நாட்களில் 6 முறை பாம்பு கடித்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்வந்த்நகர் காவல் எல்லைக்குட்பட்ட நக்லா பகத் கிராமத்தைச் சேர்ந்த அன்குஷ் யாதவ் என்ற இளைஞருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் கருநாகப்பாம்புதான் தன்னை கடித்ததாக அவர் கூறி வருகிறார்.
20 நாட்களில் 6 முறை பாம்பு கடித்ததாக புகார்
குர்கானில் உள்ள கால் சென்டரில் பணியாற்றி வரும் அன்குஷ், சொந்த ஊருக்கு வந்திருந்தபோது அடுத்தடுத்து பாம்பு கடித்ததாக கூறியுள்ளார். ஒருமுறை தனது அத்தை வீட்டுக்குச் சென்றபோதும் பாம்பு கடித்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், குடும்பத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர்.
மருத்துவமனைகளுக்கு மாற்றி மாற்றி அழைத்துச் சென்ற குடும்பத்தினர்
ஒரே மகனுக்கு தொடர்ந்து பாம்பு கடிப்பதாக கூறப்பட்டதால், குடும்பத்தினர் அவரை எட்டாவா மாவட்ட மருத்துவமனை மற்றும் சைபை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதற்கிடையே, மூடநம்பிக்கையின் அடிப்படையில் உள்ளூர் மந்திரவாதி ஒருவரிடமும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
மீண்டும் காலில் பாம்பு கடித்ததாகக் கூறி அன்குஷ் மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவரைத் தீவிர கண்காணிப்பில் வைத்து, உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
பாம்பு கடி பயமா? நிபுணர் கூறும் சந்தேகம்
இந்த தொடர் சம்பவங்கள் குறித்து பாம்புப் பிடி நிபுணர் டாக்டர் ஆசிஷ் திரிபாதி சந்தேகம் தெரிவித்துள்ளார். அன்குஷை ஒவ்வொரு முறையும் உண்மையாகவே பாம்பு கடித்திருக்க வாய்ப்பு குறைவு என அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பாம்பு கடி பயம் தொடர்பான உளவியல் பாதிப்பு இருக்கலாம் என்றும், உடலில் ஏற்படும் சிறிய காயம் அல்லது திடீர் உணர்வைக்கூட பாம்பு கடித்ததாக அவர் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அன்குஷ் தொடர்ந்து பாம்பைப் பார்த்ததாக கூறி வருவதால், மருத்துவர்கள் எந்த முடிவுக்கும் உடனடியாக வராமல் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, உண்மையான காரணத்தை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.