Delhi Flood: யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு; நீரில் மூழ்கி தத்தளிக்கும் இந்தியாவின் தலைநகரம்..!



Delhi Floods July 2023 due to Yamuna Over Flood  

 

இமயமலை பகுதியில் உருவாகி உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், ஹரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை வளப்படுத்தி செல்லும் யமுனா நதியில் தற்போது உச்சகட்ட வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், யமுனை நதி பயணம் செய்யும் இடங்களில் கடுமையான பேய்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உச்சம் பெற்றுள்ளது. 

தற்போது டெல்லி வழியே பணிக்கும் யமுனை ஆற்றில் அபாய அளவில் வெள்ளம் சென்று, கரையோர பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அம்மாநிலமே ஸ்தம்பித்துள்ள நிலையில், பல இடங்களில் 5 அடி முதல் 10 அடி வரையிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

டெல்லியில் ஏற்படுத்தப்பட்ட பாதாள மழைநீர் வடிகால்கள் அனைத்தும் நீரின் பிடியில் இருப்பதால் நகரில் இருக்கும் நீர் வெளியேற இயலாமல், ஆற்றின் நீரோடு தேங்கி நிற்கிறது. 

மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வரவேண்டாம் எனவும், தனியார் நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலைகளை கவனிக்குமாறும் அறிவுறுத்தியுள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியும் உத்தரவிட்டு இருக்கிறார்.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உயரமான இடங்களில் இருக்கும் பள்ளி மற்றும் மண்டபம் போன்ற அரசு மற்றும் தனியார் கட்டிட நிர்வாகிகளின் உதவியுடன் முகாம்கள் அணைக்கவும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.