புத்தாண்டில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தந்தை; தவறுதலாக மகனை தாக்கி உயிரை பறித்த பரிதாபம்

புத்தாண்டில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தந்தை; தவறுதலாக மகனை தாக்கி உயிரை பறித்த பரிதாபம்


celebratory gunfire killed own son

டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் யாசின்(42) என்பவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். மேலே சென்ற துப்பாக்கிக் குண்டானது விழாவில் விளையாடிக்கொண்டிருந்த அவருடைய 8 வயது மகன் மீது பாய்ந்ததில் சிறுவன் பலியானான். ஒரு வாரத்திற்குப் பிறகு யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாணவேடிக்கைகளுடன் சேர்த்து சிலர் சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கியை பயன்படுத்தி வானத்தை நோக்கி சுடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு மேல் நோக்கி சுடப்படும் குண்டானது தரையை நோக்கி வரும்பொழுது யாராவது ஆட்கள் மீது படும்பட்சத்தில் உயிரிழப்புகள் நேர்ந்துவிடுகிறது. இதைப் போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயலை தான் புத்தாண்டன்று டெல்லியைச் சேர்ந்த யாசின் என்பவர் செய்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில் அவர் சுட்ட குண்டில் ஒன்று அவரது சொந்த மகனையே தாக்கி பலியாக்கியுள்ளது.

new year

கடந்த டிசம்பர் 31 நள்ளிரவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதிலிருந்து வந்த குண்டு அந்த பகுதியை சேர்ந்த ரீகன் என்ற 8 வயது சிறுவனின் கன்னத்தில் பாய்ந்ததாகவும் டெல்லி நியூ உஸ்மாண்பூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. அதனை அடுத்து அந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கடந்த ஐந்து நாட்களாக தேடி வந்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உயிரிழந்த சிறுவனின் தந்தை யாசின் என்பவர் தான் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரித்ததில் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரவி கெய்ஷாப் என்பவரிடமிருந்து துப்பாக்கி வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

new year

தான் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டதாகவும் எதிர்பாராதவிதமாக தான் சுட்ட குண்டானது தன்னுடைய மகனையே தாக்கி அவரது உயிரை பறித்து விட்டது என புலம்புகிறார் யாசின்.