ஆன்லைன் கடனை அடைக்க பாட்டியின் நகை மீது திரும்பிய பார்வை.. 21 வயது இளைஞர் செய்த பயங்கரம்.. ஏரியில் மிதந்த சூட்கேஸ்.!
கடன் தொகையை திரும்ப செலுத்த மூதாட்டியை கொன்று நகைகளை திருடிய பக்கத்து வீட்டுக்கார இளைஞர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏரியில் சூட்கேசுக்குள் சடலம்:
Online Debt Turns Deadly: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் தெற்கு, ரமோஹள்ளி திம்மப்பண்ணா ஏரியில் சம்பவத்தன்று சூட்கேஸ் ஒன்று மர்மமான வகையில் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் நேரில் சென்று சூட்கேஸை மீட்டபோது, அதில் வயதான பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது அவர் ஜெயம்மா (வயது 61) என்பதும், மகன் ஜெய் குமார் & மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த மூதாட்டி, கடந்த சில நாட்களாக மாயமான நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டதும் அம்பலமானது.
இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!

விசாரணை:
இதனையடுத்து, மூதாட்டியை கொலை செய்தது யார்? உடல் எப்படி ஏரியில் கொண்டு வந்து வீசப்பட்டது என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 21 வயதுடைய ககன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ககனின் குடும்பத்தினரும் - மூதாட்டி ஜெயம்மாவின் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களைப்போல பழகி வந்துள்ளனர். அவ்வப்போது காய்கறிகள் வாங்கிக்கொள்வது, குழம்பு பரிமாறுவது என இருவீட்டாரும் சொந்தங்களை போல இருந்து வந்துள்ளனர்.
நகைக்காக கொலை:
இதனிடையே, பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த ககன், வேலையை விட்டு நின்றுள்ளார். பின் ஆன்லைனில் ரூ.2 லட்சம் அளவில் பணம் இழந்ததாக தெரியவருகிறது. இதனால் அதனை திரும்ப செலுத்த வேண்டிய நிலை ஏற்படவே, மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் மீது ககனுக்கு பார்வை திரும்பி இருக்கிறது. இதனால் மூதாட்டி தனியாக இருக்கும் நேரம் பார்த்து அங்கு சென்றவர், மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடி இருக்கிறார். பின் உடலை சூட்கேசில் அடைத்து ஏரியில் வீசியது அம்பலமானது. சம்பவத்துக்குப்பின் எதுவும் தெரியாதது போல இருந்தவர், மூதாட்டி மாயமானதாக கூறியதும் தானும் சேர்ந்து தேடி இருக்கிறார். இறுதியில் விசாரணைக்கு பின் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது இளைஞர் ககன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிப்பருவ காதலால் விபரீதம்.. கள்ளகாதலுக்காக கணவருக்கு மர்டர் ஸ்கெட்ச்.. தமிழக இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!