ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29 தேதிகளில் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு..!
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வரும் 28, 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்கு ஐந்து வேலை நாட்கள் நடைமுறையை அமல்படுத்தல் மற்றும் எல்.ஐ.சி., மற்றும் வங்கி ஊழியர்கள் இடையே உள்ள அகவிலைப்படி முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 28, 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏ.ஐ.பி.இ.ஏ,) அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏ.ஐ.பி.ஓ.சி), மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு உள்ளிட்ட ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டு அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் United Forum of Bank Unions (UFBU) ஆகிய சங்கங்கள் இணைந்து பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய சட்டத்தில் திருத்தங்கள், தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் போது பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். இதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அனைத்து துறையிகளிலும் பணப்புழக்கம் பாதிக்கப்படும், குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என AIBOC அமைப்பின் தலைவர் சஞ்சய் தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் சுமார் 7 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற ஜீன் 27ஆம் தேதி வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.