இந்தியா

ஏர் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக தனதாக்கிய டாடா குழுமம்.. இன்று முதல் வெற்றிப்பயணம் தொடர்ச்சி..!

Summary:

ஏர் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக தனதாக்கிய டாடா குழுமம்.. இன்று முதல் வெற்றிப்பயணம் தொடர்ச்சி..!

இந்திய அரசின் விமான நிறுவனமாக இருந்து வந்த ஏர் இந்திய நிறுவனம், பல்வேறு கடன் நெருக்கடி பிரச்சனைகளால் தவித்து வந்த நிலையில், அதனை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஏர் இந்திய குழுமத்தை வாங்க ஏலம் விடப்பட்ட நிலையில், இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி அடைந்தது. 

இதனால் ஏர் இந்திய நிறுவனத்தை பல வருடங்களுக்கு பின்னர் டாடா குழுமம் வாங்கியுள்ளது. ஏர் இந்தியா குழுமம் அதன் தொடக்க காலத்தில் டாடா வசம் இருந்த நிலையில், பின்னாளில் அது அரசுடைமையாக்கப்பட்டது. டாடா பல்வேறு தொழில்களில் முன்னேறி இருந்தாலும், விமான சேவை என்பது அவர்களுக்கு எட்டிப்பிடிக்கவேண்டிய கனியாகவும், பெரும் சவாலாகவும் இருந்தது. 

இறுதியில் நீண்ட வருட ஆசை நிறைவேற்றி, ஏர் இந்தியா டாடா குழுமத்திடம் அதிகாரபூர்வமாக தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியாவின் 100 % பங்குகள் அனைத்தும் டாடாவின் Talace Pvt குழுமத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் ஏர் இந்தியாவின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டினை டாடா குழுமம் ஏற்றுக்கொள்கிறது.

இந்த விஷயம் தொடர்பாக டாடா குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏர் இந்தியாவை டாடா குழுமத்துடன் இணைக்கும் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவு பெற்று, இன்று முதல் நாம் பணியை தொடங்குகிறோம். ஏர் இந்தியாவின் 3 பிரிவுகளில் ஏர் இந்தியா சர்வதேச விமான போக்குவரத்துக்கும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மலிவான விலையில் உள்ளூர் பயணத்திற்கும், AI SATS வர்த்தக போக்குவரத்துக்கும் உபயோகம் செய்யப்பட்டு வந்தது. 

நாம் அதனை உலக தரத்துக்கு மேம்பாடு செய்து, உலகளவில் சிறந்த பயணத்தை வழங்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏர் இந்திய பணியாளர்களை டாடா குழுமம் அன்புடன் வரவேற்கிறது. நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி, குழுமத்தை வெற்றிநடைபோட வைக்கலாம். ரத்தன் டாடா, சந்திர சேகரன் ஆகியோர் தங்களின் மனப்பூர்வமான வரவேற்பை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு வழங்கிக்கொள்கிறார்கள். மத்திய அரசுக்கும், மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் எங்களின் நன்றிகள். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை புதிய பரிணாமத்தில் மறுசீரமைப்பு செய்வதிலும், வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் மிகசிறந்த முன்னோடியாக இருந்து வருகிறார். அவரின் தொலைநோக்கு பார்வையால் அனைத்தும் இன்று சாத்தியமாகியுள்ளது. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்ற வாக்கியத்தின் கூற்றுப்படி பிரதமர் செயலாற்றி வருகிறார். அதனை நிரூபணம் செய்தும் காண்பித்துள்ளார். விமான துறையில் பிரதமரின் தொலைநோக்கு பார்வை வியக்க வைக்கிறது. அவர் எளிமையாக வாழ்ந்து அனைத்தையும் நிரூபணம் செய்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement