2019-ல் கார், பைக் வாங்கும் திட்டத்தில் உள்ளீர்களா! அரசின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல்

2019-ல் கார், பைக் வாங்கும் திட்டத்தில் உள்ளீர்களா! அரசின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல்



additional charges for petrol and diesel cars from 2019

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அரசு சார்பாக கூடுதலாக 12 ஆயிரம் ரூபாய் வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து அவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த பணத்தை செலவிட திட்டமிட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மற்றும் பைக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல்-டீசல் தேவை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த எரிபொருட்களைக் கொண்டு பயன்படுத்தப்படும் வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுகின்றது. இதை அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம் தான் எலெக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிப்புகள்.

electric cars

அடுத்த ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு புதிதாக எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அரசின் சார்பாக ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாண்டில் 50 ஆயிரம் ரூபாய் துவங்கி நான்காவது ஆண்டில் 15000 வரை ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து 12,000 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் சகஜமாக குறையக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

electric cars

இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலங்கள் அளவில் தனியார் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்களுக்கும் அவர்கள் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்கும் கிலோமீட்டர்களுக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வரி சலுகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களின் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரிப்பதற்கு அரசின் சார்பில் 200 கோடி ரூபாய் வரை நிதி உதவி வழங்கி தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், மேலும் இந்த வாகனங்களுக்கான 40 சதவிகித பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் மாதத்திற்குள் 60 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

electric cars

எலக்ட்ரிக் வாகனங்களை எளிதில் சார்ஜ் செய்யும் வகையில் பெட்ரோல் பங்குகளில் வசதி ஏற்படுத்தும் முதல் 1000 பங்குகளுக்கு அரசின் சார்பில் மானியங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசால் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒருவேளை இந்த திட்டங்கள் அனைத்தும் அமுலுக்கு வந்தால் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே வாகனங்களின் விலையில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.