சர்ச்சையில் சிக்கிய பிரபல கன்னட நடிகர் அதிரடி கைது..!!



Actor Chetan was arrested by the police for posting a controversial tweet about Hindutva

இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவு செய்த நடிகர் சேத்தனை கைது செய்த காவல்துறையினர், அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா வந்த பிரதம்ர் மோடி, அங்குள்ள மண்டியா மாவட்டம் மத்தூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் பெங்களூரு-மைசூரு இடையிலான விரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த னிலையில் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மாத்தூர் பகுதியில் உரிகவுடா மற்றும் நஞ்சேகவுடாவின் உருவச்சிலைகளை பா.ஜனதா கட்சியினர் அமைத்திருந்தனர். அவர்கள்  திப்புசுல்தானை கொன்றவர்கள் என்ற தகவல் பரவியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் உரிகவுடா மற்றும் நஞ்சேகவுடா ஆகியோர் குறித்தும் இந்துத்துவா குறித்தும் நடிகர் சேத்தன் சர்ச்சைக்குரிய வகையில் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நடிகர் சேத்தன் சர்ச்சை கருத்து குறித்து பெங்களூரு சேஷாத்திரிபுரம் காவல் நிலையத்தில் சிவக்குமார் என்பவர் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நடிகர் சேத்தனை நேற்று கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நடிகர் சேத்தனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நடிகர் சேத்தன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.