செல்ஃபி மோகத்தால் விபரீதம்: ஆற்றங்கரைக்கு குளிக்க நண்பர்களுடன் சென்ற சிறுவன் பரிதாப பலி..!

செல்ஃபி மோகத்தால் விபரீதம்: ஆற்றங்கரைக்கு குளிக்க நண்பர்களுடன் சென்ற சிறுவன் பரிதாப பலி..!


16-year-old boy drowned while trying to take a selfie with his friends on the river bank

ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஆற்றங்கரையில் நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்பூம் மாவட்டம், ஜாம்ஷெட்பூரின் பாக்பேடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது கார்காய் ஆறு. இந்த ஆற்றில் விளையாட, விக்ராந்த் சோனி என்ற சிறுவன் நேற்று தனது சகோதரர் மற்றும் 4 நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது விக்ராந்த் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.

அப்போது ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருந்ததால், ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார். விக்ராந்தை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரரும் நீரில் மூழ்கத் தொடங்கினார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டனர். ஆனால் விக்ராந்த் நீரில் வெகுதூரம் அடித்து செல்லப்பட்டதால் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கும் பாக்பேடா காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர்  2 மணி நேரம் கழித்து விக்ராந்தின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பாக்பேடா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.