அடிக்கடி தலைவலி வருகிறதா? உஷார்.! இப்போவே கவனிக்கலன்னா.. வருத்தப்படுவீங்க.!
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் தலைவலி என்பது பலருக்கும் அடிக்கடி ஏற்படும் பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இதனால் அவதிப்படுகின்றனர்.
வேலைப்பளு, மனஅழுத்தம், தூக்கமின்மை, சரியான உணவுப் பழக்கமின்மை போன்றவை தலைவலிக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. பலர் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு மாத்திரை உட்கொண்டு அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.
ஆனால் சில நேரங்களில் தொடர்ந்து வரும் தலைவலி உடல்நல பிரச்சனைகளுக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இதுதான் முதல் சிக்னல்! இதய அடைப்புக்கானா 5 எச்சரிக்கை அறிகுறிகள் இவை தான்! அசால்ட்டா இருக்காத்தீங்க....
தற்போது மொபைல், லேப்டாப், டிவி போன்ற திரை சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் திரையை பார்த்துக்கொண்டிருப்பது கண் சோர்வையும் தலைவலியையும் ஏற்படுத்துகிறது.
அதேபோல் போதுமான தண்ணீர் குடிக்காதது, நேரத்திற்கு உணவு சாப்பிடாதது, அதிக வெயிலில் இருப்பது போன்ற காரணங்களாலும் தலைவலி வரலாம்.

பெண்களிடம் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாதவிடாய் காலம், கர்ப்ப காலம் அல்லது அதிக மனஅழுத்தம் இருக்கும் நேரங்களில் மைக்ரேன் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். தலைவலி வந்தவுடன் அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொள்வது நீண்டகாலத்தில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
தலைவலியுடன் வாந்தி, மயக்கம், பார்வை மங்குதல், காய்ச்சல், கழுத்து வலி அல்லது பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம், சைனஸ், மைக்ரேன் அல்லது பிற நரம்பியல் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
தலைவலியை தவிர்க்க தினமும் 7–8 மணி நேரம் தூங்குவது, போதுமான தண்ணீர் குடிப்பது, சத்தான உணவுகளை உட்கொள்வது, திரை பயன்பாட்டிற்கு இடையே ஓய்வு எடுப்பது அவசியம். நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை மனஅழுத்தத்தை குறைத்து உடல் நலத்தை மேம்படுத்தும்.
“சிறிய தலைவலி தான்” என்று அலட்சியப்படுத்தாமல், உடல் தரும் எச்சரிக்கைகளை கவனித்தால் பெரிய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: ஆளையே கொல்லும் அமைதியான மாரடைப்பின் முதல் 6 அறிகுறிகள் இதுதான்!