ஊட்டச்சத்தில்லா உதார் விளம்பரங்கள்.. மக்களே விழித்திடுங்கள்..!

ஊட்டச்சத்தில்லா உதார் விளம்பரங்கள்.. மக்களே விழித்திடுங்கள்..!


Children Drinking Advertisement Drinks is not to Health

இன்றளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானங்கள் என்ற பெயரில் பல்வேறு விளம்பரங்கள் வெளிவருகிறது. அந்த பானங்களில் ஊட்டமும் இல்லை, சத்தும் இல்லை என்பதே நிதர்சனம். அவை பலமுறை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு, மக்களின் மனதில் அப்படியான தாக்கத்தினை ஏற்படுத்திவிடுகிறது. 

குழந்தை உயரமாக வளர, விஞ்ஞானியாக மாற, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க என்று பல விளம்பரங்கள் நம்மிடையே பரவி வருகிறது. இவ்வாறான விளம்பரங்களில் கவர்ச்சி மட்டும் தான் கட்டுடங்காமல் இருக்கும். ஊட்டச்சத்து துளியளவும் இருக்காது. அன்றைய நாட்களில் செல்வந்தர்கள் தங்களை உயர்த்தி காண்பித்துக்கொள்ள பானங்கள் குடிக்க தொடங்கி, இன்று மலிவு விலையில் கிடைக்கும் குளிர்பானத்தை அருந்தும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். அதன் தயாரிப்பு முறை, வேதிப்பொருட்கள் கலவை கூட நமக்கு தெரியாது. 

health tips

விளம்பரத்தினால் தொலைக்காட்சி, ஊடகத்திற்கு வருமானம் வருகிறது என்பதால் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனமும் ஒளிபரப்பி வருகிறது. ஊட்டசத்துக்கு இந்த பவுடரை சாப்பிடுங்கள், இந்த பானத்தை குடியுங்கள் என்று பல விளம்பரம் வருகிறது. ஆனால், இளநீர் குடியுங்கள் என்று எந்த நிறுவனமும் சொல்வதில்லை, காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுங்கள் என்றும் தெரிவிப்பது இல்லை. அவர்களின் பொருளை விற்க கம்பி கட்டும் கதையெல்லாம் சொல்லுவார்கள். 

வியாபார யுக்தி என்று ஆயிரம் பேசினாலும், அவர்கள் வழங்கும் பொருட்களில், உணவுத்தயாரிப்பின் போது குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் நல்ல தரமுள்ள பொருட்களாக கூட தயார் செய்வது கிடையாது என்றும் விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறான பானங்கள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதிக எடை உள்ளவர்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால், நீரிழிவு மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்களாக குழந்தைகள் உருவாக இன்றைய உணவு முறையும், துரித உணவும், அவர்கள் குடிக்கும் கேடுகெட்ட பானமும் காரணமாக அமைகிறது. இவைகளை நாமே வாங்கி குடிக்கிறோம், குழந்தைகளுக்கு கொடுக்கிறோம் என்பது தான் வேதனையின் உச்சம். 

health tips

6 மாதம் வரை உள்ள கைக்குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பாலே கொடுக்க வேண்டும். அதனை தவிர்த்து செயற்கை பொருட்களை கொடுத்தால், பின்னாளில் குழந்தைகளுக்கு கட்டாயம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை கலக்கப்பட்ட பானத்தை பாலில் சேர்த்து, அதில் 4 கரண்டி சர்க்கரையை சேர்க்கும் சூழலும் இன்று ஏற்பட்டுவிட்டது. வீட்டிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானைக்கரம், மோர் போன்றவற்றை தயாரித்து குடிக்கலாம். பழைய சோறில் நீரை ஊற்றிவைத்து, மறுநாள் அந்த நீரை குடிக்கும் போது ஏற்படும் உடல் குளிர்ச்சி எதில் இருக்கிறது? என்பதை நினைத்து பார்த்தால் அனைத்தும் புரியும். 

சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, பனைவெல்லம் போன்றவற்றை உபயோகம் செய்யலாம். சிறுதானிய கஞ்சிகளை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். காலை நேரங்களில் டீ, காபி குடிப்பதற்கு பதில், பனைவெல்ல நீரை கொதிக்க வைத்து குடிக்கலாம். இயற்கையான உணவு முறைகளே எதிர்கால தலைமுறையின் உடல்நலத்தை பாதுகாக்கும்.