இந்தியாவில் 2000-யை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 300க்கும் மேல் எகிறிய எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1900க்கும் மேல் உள்ளதாக பல்வேறு மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 முதல் 15 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற நிஷ்முதீன் தப்லிஜி ஜமாத் மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6000ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். தற்போது அந்த மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 387 புதிய பாதிப்பும் 11 இறப்புகளும் பதிவாகியுள்ளன. 11 பேரில் 5 பேர் மும்பையிலும், உ.பி, மே.வங்காளம் மற்றும் ம.பியில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் தமிழகத்தில் புதிதாக 110, டெல்லியில் 53, தெலங்கானாவில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.