சினிமா

தொடர் சிக்கல்! 800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்? வைரலாகும் டிவிட்டர் பதிவு!

Summary:

800 திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

800 திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி தொடங்கி அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. ஆனால் இந்த சர்ச்சை குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு, நன்றி.. வணக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்". என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி அந்த பதிவில் நன்றி.. வணக்கம்.. என குறிப்பிட்டுள்ளதால் அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement