பத்மபூஷன் விருதை பெற்றதும் வானை பார்த்து விஜயகாந்துக்கு சமர்ப்பித்த பிரேமலதா; நெகிழ்ச்சி தருணம்.!



Premalatha Vijayakanth Get Padma Bhusan Award for Vijayakanth 

 

தமிழ் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகவும், கருப்பு எம்.ஜி.ஆராகவும் அறியப்பட்ட நடிகர் விஜயகாந்த், தன்னை நம்பிய மக்களுக்கு செய்த நற்செயல்கள் ஏராளம். திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி, பல வீட்டில் விளக்கெரிய உறுதுணையாக இருந்த விஜயகாந்த் வாயிலாக அடையாளம் பெற்ற நடிகர்கள் ஏராளம். 

1980ல் தொடங்கிய திரை வாழ்க்கை:

கடந்த 1970 களில் அறிமுகம், 1980 களில் நாயகன் என தொடர் வளர்ச்சியை கண்ட விஜயகாந்த், காலத்தால் அழியாத பல படைப்புக்களை கொடுத்திருந்தார். திரையில் மட்டுமல்லாது திரைக்கு வெளியேயும் அன்புள்ள கொண்ட கோபக்கார மனிதராக இருந்த விஜயகாந்த், தனக்கு எதிரில் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்டு நியாயம் வாங்கிக்கொடுக்கும் தன்மையும் கொண்டவர். 

மக்கள் பணிக்கான வாய்ப்பு:

ஒவ்வொரு நபருக்கும் காலம் அதற்கான வாய்ப்பை வழங்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின், 2011–2016 தமிழ்நாடு சட்டப்பேரவை ஆட்சிக்காலத்தில் இவருக்கு எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட விஜயகாந்த், 28 டிசம்பர் 2023 அன்று இயற்கை எய்தினார். 

விஜயகாந்தின் மறைவு:

இவரின் மறைவு பலருக்கும் சோகத்தை தந்தது. தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி மக்களுக்கான ஆட்சியை வழங்க வேண்டும் என உறுதியுடன் இருந்த அவர் எதிர்க்கட்சி தலைவராக மக்கள் பணியாற்றி பின் மறைந்தார். இவரின் திரையுலக பயணம் மற்றும் பொதுவாழ்க்கை அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி மத்திய அரசு விஜயகாந்தின் மறைவுக்கு பின் பத்ம பூஷன் விருது வழங்கி அறிவித்தது. 

பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது:

இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த விஜயகாந்த் சார்பில் அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பத்ம பூஷன் விருதை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளில் இருந்து பெற்றுக்கொண்டார். அப்போது கண்கலங்கியபடி அதனை மேடையிலேயே வானை பார்த்து விஜயகாந்துக்கு சமர்ப்பித்தார்.