சினிமா

பிகில் படம் வெளியாவதில் புது சிக்கல்! காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியது!

Summary:

Bigil movie story theft issue court order

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் இந்த விவகாரம் காப்புரிமை சம்மந்தப்பட்டது எனவும், வழக்கை வாபஸ் பெற்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் கீழமை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இயக்குனர் அட்லீ தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் பிகில் படத்தின் கதை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார் என வாதிட்டார்.

மேலும், தயாரிப்பு நிறுவனம் சார்பில் பேசிய வழக்கறிஞர் கூறுகையில் மனு தாரர் கிழமை நீதிமன்றத்தில் காப்புரிமை மீறியதாக கூறவில்லை என்றும், பணம் பறிக்க மற்றும் விளம்பரத்துக்கா இப்படி கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதுகுறித்து பேசிய நீதிபதி வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை நாடவும் கிழமை நீதிமன்றம் எப்படி அனுமதி வழங்கியது என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மீண்டும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை நாட உதவி இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதனால் பிகில் படத்தின் காப்புரிமை குறித்த பிரச்சனை இன்னும் தீராத நிலையில் சொன்னபடி படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.


Advertisement