ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமரின் தற்போதைய நிலை என்ன.? சற்றுமுன் வெளியான தகவல்.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை தாக்கி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் தாக்கியது. கொரோனா தாக்கத்தால் கடந்த சில நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆட்சி நடத்திவந்தார் போரிஸ் ஜான்சன்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், லண்டன் St . தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை அடுத்து மூச்சு விடுவதில் மேலும் சிரமம் ஏற்பட்டதை அடுத்து இன்று அதிகாலை அவசர சிகிச்சை வார்டுக்கு (ICU) மாற்றப்பட்டார் போரிஸ் ஜான்சன்.
ஐசியூவில் இருந்தாலும் பிரதமருக்கு செயற்கை சுவாச கருவிகள் ஏதும் பொருத்தப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், பிரதமரின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து இங்கிலாந்து தொடங்கி உலக மக்கள் வரை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து பிரதமர் நலமுடன் திரும்ப வேண்டும் என்றும் மக்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கினர். உலக தலைவர்களும் போரிஸ் ஜான்சன் நலமுடன் திரும்பவேண்டும் என கூறிவந்தனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இங்கிலாந்து பிரதமர் இன்னும் அவசர சிகிச்சை பிரிவிலையே இருப்பதாகவும், தற்போதுவரை அவருக்கு செயற்கை சுவாச கருவி (வெண்டிலேட்டர்) பொருத்தப்படவில்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ICU வில் இருக்கும் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு 15 லிட்டர் ஆக்சிஜென் செலுத்தப்படும் அதேநேரத்தில் போரிஸ் ஜான்சனுக்கு 4 லிட்டர் ஆக்சிஜென் போதுமானதாக இருப்பதாகவும், அவரால் இயற்கையாக சுவாசிக்க முடிவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.