வெறுப்புணர்வின் கொடூர செயல்... 26 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட 6 வயது முஸ்லிம் சிறுவன்... 64 வயது முதியவர் கைது.!
அமெரிக்காவின் சிக்காகோ நகரை சேர்ந்த 6 வயது இஸ்லாமிய சிறுவன் 26 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 64 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சிக்காகோ நகரில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது 6 வயது சிறுவனுடன் வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கி இருக்கிறார். இந்நிலையில் அவரது தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஜோசப் என்ற 64 வயது நபர் திடீரென அந்தப் பெண்மணியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்குள் நுழைந்த அவர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்மணியையும் அவரது 6 வயது மகனையும் சராமாறியாக குத்தி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். காயமடைந்த பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக தனது கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ள அந்த பெண் "நீங்கள் இருவரும் முஸ்லிமாக சாகவேண்டும்" என்று கூறி அந்த நபர் தன்னையும் தன் மகனையும் தாக்கியதாக குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் ஜோசப் என்ற நபரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன யுத்தத்தின் காரணமாக நடந்திருக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதல் வெறுப்புணர்வின் பயங்கர செயல் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.