ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ் கெட்டப்பில் அமோக வசூல் செய்த வாலிபர்! போலீசார் அதிரடி!

ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ் கெட்டப்பில் அமோக வசூல் செய்த வாலிபர்! போலீசார் அதிரடி!



Young man acting like police

கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று  தமிழக அரசு வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூரை சேர்ந்த சுரேஷ்கண்ணன் என்பவர் நேற்று முன்தினம் சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சுரேஷ் கண்ணனை நிறுத்தி, ஊரடங்கை உத்தரவை மீறி ஏன் வெளியே வந்தாய்? என மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.7,500-ஐ பறித்துக்கொண்டு காவல்  நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறியதாக கூறப்படுகிறது.

police

இதனை தொடர்ந்து அந்த நபர் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை மறித்து பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வந்து வாங்குமாறு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பணம் மற்றும் செல்போன் போன்ற பொருட்களை போலீசிடம் கொடுத்ததால் அதை வாங்குவதற்காக, மதகுபட்டி காவல் நிலையத்திற்கு வந்தனர். மேலும் அங்கிருந்த உதவி ஆய்வாளர் இடம் நடந்த விவரத்தை கூறினார்கள்.

விசாரணையில் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் யாரும் அவ்வாறு பணம், செல்போனை பறிக்கவில்லை எனவும், போலீஸ் அல்லாத மர்ம நபர் ஒருவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர். விசாரணையில் போலீஸ்காரர் போல் நடித்து பணம் பறித்தது சிவகங்கையை அடுத்த கூட்டுறவுபட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அருண்பிரகாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.