படிக்க விரும்பிய இளம்பெண்ணுக்கு கட்டாய திருமணம்: இறுதியில் நிகழ்ந்த சோகம்..!young girl commits suicide by drink poison near madurai

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கீழ உரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிராமி (17). இவர் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயிலுவது இவருக்கு லட்சியமாக இருந்துள்ளது.

இந்த நிலையில், அபிராமிக்கு அவரது பெற்றோர் உறவினருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லை. மேலும் உயர்கல்வி படிப்பதே அவரது எண்ணமாக இருந்துள்ளது. அபிராமியின் பெற்றோர் அவரை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அபிராமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி  கிடந்த அபிராமியை, அவரது உறவினர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அபிராமிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அபிராமியின் தந்தை முருகன் அளித்த புகாரின் அடிப்படையில்,  திருமங்கலம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க விரும்பிய இளம்பெண்ணை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.