மார்ச் 10 முதல் 17ஆம் தேதிக்குள் சென்னையில் இந்த இடத்திற்கு சென்றவரா நீங்கள்.? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், கடந்த மாதம் 10 முதல் 17ஆம் தேதி வரை சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்களை பாதுகாப்பாக இருக்க கூறி சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இயங்கிவரும் லைப்ஸ்டைல் கடையில் வேலைபார்த்த மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் வேலை பார்த்த மற்ற ஊழியர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 10 முதல் 17 ஆம் தேதி வரை பீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்கள், குறிப்பாக லைப்ஸ்டைல் கடைக்கு சென்றவர்கள், மாலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் மிக கவனமாக இருக்கும்படியும், கொரோனா அறிகுறி ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவ உதவிக்கு கொரோனா கட்டுப்பட்டு அறையை தொடர்புகொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களில் யாரேனும் குறிப்பிட்ட தேதிகளில் பீனிக்ஸ் மால் சென்றிருந்தாலோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் அங்கு சென்றிருந்தாலோ கவனமாக இருங்கள். இந்த தகவலை பரவலாக பகிர்ந்து அந்த மாலுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் சென்றவர்களை சென்றடைய உதவுமாறும் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.