கழுத்தை நெரித்த கடன் தொல்லை., கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய்-தந்தை மகனுடன் எடுத்த விபரீத முடிவு.!



Viluppuram Native Man Live Chennai Puduvannarpet Suicide with Family due to Loan Issue

கடன் தொல்லையின் காரணமாக தாய் - தந்தை, மகன் என 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சோகம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் நகர பகுதியை சார்ந்தவர் சிவாஜி (வயது 45). இவரது மனைவி வனிதா (வயது 32). இவர்களின் ஒரே மகன் வெற்றிவேல் (வயது 10). இவர்கள் 3 பேரும் கடந்த 6 வருடமாக சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை, வெங்கடேசன் தெருவில் 3 ஆவது மாடியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சிவாஜி அங்குள்ள பூண்டி தங்கம்மாள் தெருவில் தையல் கடையை நடத்தி வருகிறார். 

இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால், ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேளைக்கு சென்று வந்துள்ளார். வனிதா அருகே இருக்கும் குழாய் கடையில் பணியாற்றி வந்துள்ளார். வெற்றிவேல் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

India

நேற்று முன்தினத்தில் வீட்டில் இருந்த 3 பேரும், காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக சந்தேகமடைந்து எட்டி பார்த்துள்ளனர். இதன்போது, சிவாஜி நைலான் கயிற்றில் தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். வனிதா கழுத்தில் கயிறுடன் தரையிலும், அருகே சிறுவன் வெற்றிவேலும் பிணமாக இருந்துள்ளனர். 

இதனைக்கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளாகிய அக்கம் பக்கத்தினர், வண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

India

விசாரணையில், சிவாஜியின் மனைவி வனிதா எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்ட நிலையில், அக்கடிதத்தில், "நாங்கள் அளவுக்கு அதிகமான கடனால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். கடனை கட்டமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதால், எங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம்" என்று எழுதியுள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், தம்பதிகள் யாரிடம் இருந்து கடன் பெற்றுள்ளனர்? இவர்களை மிரட்டியது யார்? கந்துவட்டி பிரச்சனை இருந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.