தமிழகம் Covid-19

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்ற அலட்சியம் வேண்டாம்.! கண்டிப்பாக இதனை செய்யுங்கள்.! அமைச்சர் விஜயபாஸ்கர்.!

Summary:

கொரோனா தொற்று குறைந்தாலும் முக கவசம் முக்கியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சியில், புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்க கூடுதலாக 240 நடமாடும் குழுக்களை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் கூடுதலாக 60 நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் நோய் தொற்று தடுப்பு குழுக்கள் உள்ளிட்ட 240 நடமாடும் குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததற்கு பிறகும் நோய் பரவும் அபாயம் ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. மழை, பண்டிகை காலம், மக்கள் கூட்டத்தை தாண்டி, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும் கொரோனா குறைந்து வருவதால்,யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது. மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


Advertisement