
vaiko about hydro carbon scheme in tn
தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நெடுவாசல் பிரச்சனை தீர்ந்து சிறிது காலம் நிம்மதியாக இருக்கும் தமிழக மக்களுக்கு இந்த ஒப்பந்தம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன்கள் எடுக்க அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இதில் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைப் பாலை மணல் வெளி ஆக்கும் மோடி அரசின் சதித்திட்டத்திற்கு நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்ற தகவல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகளும் தமிழக மக்களும் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வலிந்து செயல் படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முனைந்து இருப்பது தமிழ் நாட்டின் மீது உள்ள மோடி அரசின் வன்மத்தைப் பறை சாற்றுகின்றது.
நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டக்களத்தில் இறங்கினர். ஆனால் மத்திய அரசு தமிழக மக்களின் கொந்தளிப்பை அலட்சியப் படுத்திவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை கொண்டு வந்து காவேரி பாசனப் பகுதி மக்களை பஞ்சத்தில் தள்ளி வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த மண்ணை விட்டு ஏதிலிகளாக இடம்பெயரச் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு சதிச்செயலில் ஈடுபட்டு வருகின்றது.
தமிழ் நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து விட முடியாது. அடிமைச் சேவகம் புரியும் தமிழக அரசைத் துணைக்கு வைத்துக் கொண்டு, அடக்கு முறையை ஏவி, மக்கள் போராட்டத்தை முறியடிக்கலாம் என்று மத்திய அரசு கருதுகின்றது. அது பகல் கனவாகவே முடியும்.
மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இல்லையேல் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் ஆவேசமாக மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
Advertisement
Advertisement