"குதிரை பேரம் தான் தூய சக்தியின் துர்நாற்றம்" - தவெகவை கடுமையாக சாடிய டிடிவி.. காரணம் என்ன?



TTV Dhinakaran Slams TVK Over ‘Horse Trading’ Allegation in Tamil Nadu Politics

டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2026 தேர்தல்:

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026ல் வெற்றியடைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பொறுப்பேற்கும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் காமராஜ், அமமுக சார்பில் தேர்தலில் பங்கேற்று வெற்றியடைந்து, தற்போது விஜய்க்கு ஆதரவு மனப்பான்மையுடன் செயல்படுவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.  

இதையும் படிங்க: அமமுக எம்எல்ஏ மாயமா? தவெகவுக்கு ஆதரவா? ஒரேயடியாக போட்டுத்தாக்கிய டிடிவி தினகரன்.!

விஜய் ஆதரவு நிலைப்பாடு:

முன்னதாக காமராஜ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட கடிதமும் வெளியாகி சர்ச்சையான நிலையில், அதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக அவர் பொறுப்பேற்கும்போது விஜய் குறித்து பாராட்டி பேசினார். இதனால் அவரை கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கி உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் காட்டமான எதிர்ப்பையும் தெரிவித்து இருக்கிறார்.
ttv dhinakaran

துர்நாற்றம்:

அவரின் எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம். கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.

நடந்தது என்ன?

கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது. அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது  திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

தூயசக்தியா? துர்நாற்றமா?

தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: யாரை ஏமாத்துறீங்க? விஜய் எங்களுக்கு மாமனா, மச்சானா..? அரசியலுக்காக இப்படி செய்யலாமா.... அதை பார்த்து அதிர்ச்சியான TTV தினகரன்! பின்னணியில் இருப்பவர் யார்?