2.5 லட்சம் உயிர்களை காவு வாங்கிய இன்றையதினத்தை மறக்கமுடியுமா..! ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியதினம்.!

2.5 லட்சம் உயிர்களை காவு வாங்கிய இன்றையதினத்தை மறக்கமுடியுமா..! ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியதினம்.!



tsunami-memorial-day

கடந்த 26.12. 2004-ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை சுனாமியால் தமிழகத்தின் பல  கடற்கரை பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 2.5 லட்சம் உயிர்களை காவு வாங்கிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி  பல மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றையதினத்தில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லமாட்டார்கள். 

கடலுக்கடியில் உருவான  பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின. இந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த  2.5 லட்சம் மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள கடலோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கிருஸ்துமஸ் கொண்டாட சென்ற பலர் கடலுக்குள் மடிந்தனர். வேளாங்கண்ணி மிகப்பெரிய அழிவை சந்தித்தது. 

Tsunami

லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கி, 2004 டிசம்பர் 26 ஆம் தேதி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. எப்போதுமே மனவேதனை ஏற்பட்டால் கடற்கரைக்குச்சென்றால் கடல் தாலாட்டால் மனநிம்மதி கிடைக்கும் என்று பலரும் கடற்கரைக்குச்செல்வது வழக்கம். ஆனால் அன்றையதினம் கண்ணிமைக்கும் நேரத்தில் கடல்தாய் சீற்றத்தால் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து பலரையும் அடித்துச்சென்றது.

இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழகத்தில் சுனாமி கோர தாண்டவம் ஆடியது. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்கள் நீரால் சூழப்பட்டன. நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தநிலையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சுனாமியில் பறிகொடுத்த தங்கள் உறவுகளை எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கடலில் பூக்கள் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.