"வாழ்ந்தால் உன்னோடு, இல்லையேல் மண்ணோடு" அம்மாவுடன் விஷமருந்தி தற்கொலை செய்த 8 வயது சிறுவன் - கடிதத்தில் கண்ணீர் தகவல்.!
8 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத கணவனால் போராடி தோற்றுப்போன தாய், தனது மகனுடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பெண் எழுதி வைத்த கடிதத்தை படித்து கலங்கிப்போன அதிகாரிகளின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி, பெத்தகோன்பட்டியில் வசித்துவருபவர் ஜெயபாரதி (வயது 36). இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரானந்தம் (வயது 42). இவர்கள் இருவருக்கும் கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளுக்கு 8 வயதுடைய ஹரி என்ற மகன் இருக்கிறார். வீரானந்தம் வெளிநாட்டில் பணியாற்றிவரும் நிலையில், ஜெயபாரதி மகனோடு பொன்னமராவதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயபாரதியின் இல்லம் கடந்த சிலநாட்களாகவே பூட்டி இருந்துள்ளது. வீட்டில் இருந்தும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொன்னமராவதி காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்றுபார்க்கையில் தாய், மகன் பிணமாக இருந்தது தெரியவந்தது. இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள் ஜெயபாரதியின் கடிதத்தை கைப்பற்றினர்.

முதற்கட்ட விசாரணையில் வீரானந்தம் தனது மனைவிக்கு குடும்ப செலவுகளுக்கு பணம் அனுப்பவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் மகனுடன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது தெரியவந்தது. ஜெயபாரதியின் கடிதத்தில், "எங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. குடும்ப நிலை, உடல்நிலை, மன அழுத்தத்தால் இம்முடிவை எடுக்கிறேன். எங்களது உடலை அப்பா, கணவரிடம் ஒப்படைக்க கூடாது. நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக கணவர் எங்களுக்கு என எதுவும் செய்தது கிடையாது. எனது மகனுக்கு தந்தையாகவும், எனக்கு கணவராகவும் அவர் இருந்தது கிடையாது. மகனிடம் அப்பாவுடன் செல் என கூறினேன். அவனோ இருந்தால் உன்னுடன் இருக்கிறேன் இல்லையென்றால் வேண்டாம் என்று கூறி விஷத்தை என்னுடன் சேர்ந்து குடித்துவிட்டான். இவ்வீட்டில் இருந்து குண்டூசி கூட கணவருக்கோ, அப்பாவுக்கோ கொடுக்க கூடாது" என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.