
இடதகராறில் அண்ணனை மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த தம்பி.. திருவண்ணாமலையில் பயங்கரம்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், பொத்தர் குஷால் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 60). இவரின் தம்பி கோவிந்தசாமி. இவர்கள் இருவரும் விவசாயிகள் ஆவார்கள். ஆனால், நிலம் பங்கு பிரித்தல் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த 22 ஆம் தேதி கோவிந்தசாமி மற்றும் அவரின் மனைவி மீனா ஆகியோர் நாராயணனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, நிலம் தொடர்பான பிரச்சனை குறித்து பேசப்பட்ட நிலையில், அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு கைகலப்பாக மாறவே, நாராயணனை கோவிந்தசாமி மற்றும் அவரின் மனைவி மீனா சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கோவிந்தசாமி, தனது அண்ணன் நாராயணனை காலால் தாக்கி இருக்கிறார்.
இதனால் தலையில் காயம் பட்டு நாராயணன் படுகாயத்துடன் அலறித்துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கிருந்து சென்னை அரசு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நாராயணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக நாராயணனின் மகன் ஏழுமலை போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கோவிந்தசாமி மற்றும் மீனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக அண்ணனை தம்பி மற்றும் அவரின் மனைவி கொலை செய்த பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement