தடுப்பூசியால் தடம்புரண்டதா மாணவியின் வாழ்க்கை?... நெல்லையில் கண்ணீருடன் ஆட்சியருக்கு கோரிக்கை வைத்த தந்தை.!



Tirunelveli Girl Student Nallathai Un Conscious Condition at Hospital 0

தடுப்பூசியால் மகளின் உடல்நலம் கேடாகிவிட்டதாக தந்தை புகாரில் தெரிவிக்க, மருத்துவக்கல்லூரி முதல்வர் சிறுமிக்கு சிறுவயதில் இருந்து உள்ள பிரச்சனை காரணமாக உடல்நல பிரச்சனை ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பருத்திப்பாடு, நடுத்தெருவில் வசித்து வருபவர் மகாராஜன். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். மகாராஜன் தனது மனைவி, மகளுடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது, அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது "எனக்கு ஒரு மகன், 2 மகள்கள் இருக்கின்றனர். மகன் எஞ்சினியரிங் படித்து வருகிறார். மூத்த மகள் ஆசிரியர் பயிற்சி படிக்கிறார். நல்லதாய் என்ற பெயரை கொண்ட 2-வது மகள் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார். 

கடந்த மார்ச் மாதத்தில் மகளின் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது, எனது மகள் தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லை என்று கூறியும், ஆசிரியர்கள் அவளை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்த வைத்துள்ளனர். தடுப்பூசி செலுத்திய பின்னர் மகள் வாந்தி, மயக்கம் போன்று பல்வேறு உபாதையால் பாதிக்கப்பட்டார்.

இதனால் ஏற்பட்ட அடுத்தடுத்த பக்கவிளைவால் ஆபத்தான கட்டத்திற்கு மகள் சென்றுவிட்டார். இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லை. மேற்படி பணப்பிரச்சனை காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தேன். 

அவருக்கு ஜூன் மாதத்தில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூளையில் காசநோய் இருப்பதாக தெரிவித்தார்கள். உடனடியாக ஜூலையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிறிது உடல்நலம் தேறியவர் மீண்டும் சுயநினைவை இழந்துவிட்டார். எனது மகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், "அந்த மாணவிக்கு டியூபர்குளோஸிஸ் மெனிங்க்டிஸ் என்ற நோய்பாதிப்பு உள்ளது. இது சிறுவயதில் இருந்து இருந்திருக்க வேண்டும். தடுப்பூசியால் மாணவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆட்சியரும் எங்களிடம் மாணவியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு முழு சிகிச்சை அளித்து வருகிறோம்" என்று கூறினார்.