கொரோனாவால் மறைந்த மருத்துவரின் ஆசை நிறைவேறியது.! உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்ய உத்தரவு.!
கொரோனாவால் மறைந்த மருத்துவரின் ஆசை நிறைவேறியது.! உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்ய உத்தரவு.!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். அவர் சிகிச்சை அளித்த நோயாளிகளிடம் இருந்து அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் ஏப்ரல் 19-ம் தேதி மருத்துவர் சைமன் காலமானார்.
அப்போது மருத்துவர் சைமனின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆம்புலன்ஸ் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், தனது கணவனின் விருப்பப்படி அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய கோரி அவரது மனைவி ஆனந்தி சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அவரது மனுவை பரிசீலித்த ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சைமனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் மீண்டும் தனது கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் வேலக்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.