முன் விரோதத்தால் தகராறு: வெல்டரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்!..பட்டப்பகலில் துணிகரம்..!

முன் விரோதத்தால் தகராறு: வெல்டரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்!..பட்டப்பகலில் துணிகரம்..!


The gang chased the welder away and scythe

சேலம் மாவட்டம், குமாரசாமிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி ( 29). இவர் தமிழ்சங்கம் ரோடு பகுதியில் உள்ள ஒரு கார் வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். சீரங்கன்பாளையம் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி சீரங்கன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி சீரங்கனுக்கும், முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சீரங்கன் முரளியை தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முரளி அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாக முரளி மீது சீரங்கன் ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சீரங்கன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் முரளி வேலை பார்க்கும் வெல்டிங் பட்டறைக்கு வந்தது. பின்னர் அவர்கள்  5 பேரும், வேலை செய்துகொண்டிருந்த முரளியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் திடீரென அரிவாளால் முரளியை வெட்ட முயன்றனர்.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த முரளி, பின்னர் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை ஓடஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த முரளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உதவி காவல் கண்காணிப்பாளர் லட்சுமி பிரியா தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முரளியை வெட்டிய கும்பலை சேர்ந்த பெரியபுதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), தமிழ்செல்வன் (30), குமாரசாமிப்பட்டியை சேர்ந்த ரவுடி துரை (45) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீரங்கன் உள்ளிட்ட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.