தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி.!!!



tamilnadu-school-reopening-heatwave-decision

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் நீடித்து வரும் கடுமையான வெயில் காரணமாக அதை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து எழுந்துள்ளது.

அரசியல் கட்சிகள், பெற்றோர் அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர், தற்போதைய வெப்ப அலை சூழ்நிலையில் மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...? வந்தது வானிலை அலர்ட்....!

வானிலை அறிக்கை கேட்ட பள்ளிக்கல்வித்துறை

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் எப்போது தொடங்கும் என்பதையும் அறிக்கையில் விளக்குமாறு கேட்டுள்ளதாக அவர் கூறினார். அந்த தகவல்கள் கிடைத்த பிறகே அடுத்த கட்ட ஆலோசனைகள் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.

முதல்வருடன் ஆலோசனைக்கு பின் இறுதி முடிவு

வானிலை முன்னறிவிப்பு விவரங்கள் கிடைத்தவுடன், அது குறித்து முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் அதிகாரப்பூர்வ தேதி குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதனால், பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படுமா அல்லது மேலும் சில நாட்கள் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

காலை உணவு, மதிய உணவு திட்டம் தொடரும்

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கான காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் வழக்கம்போல எந்த தடையும் இல்லாமல் செயல்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசின் இறுதி முடிவு மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

 

இதையும் படிங்க: வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!