சுய ஊரடங்கு உத்தரவு.! பூட்டப்பட்ட கோவில்..! சாலையில் நடந்த திருமணம்.! வைரல் புகைப்படம்.!
உலகம் முழுவதும் கடும் பீதியை ஏற்படுத்திவரும் கொரோனாவால் உலக நாடுகள் கதிகலங்கி போய் உள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாதிப்பும், உயிரிழப்புகளும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து இன்று இந்தியா முழுவதும் மக்கள் ஒருநாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்துவருகின்றனர்.

இதனால், ரயில், விமானம், பேருந்து போக்குவரத்துக்கு, கடைகள், கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி உள்ளன. கோவில்கள் மற்றும் கல்யாண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளதால் வேறு வழியின்றி இன்றைய தேதியில் நடக்கவிருந்த ஏராளமான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கோவிலில் ஒரு ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தை தள்ளிவைக்கும்படி கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், இன்று திருமணம் நடத்தியே தீர வேண்டும் என்று முடிவு செய்து கோவிலுக்கு வந்த அவர்கள் சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பூட்டிய கோவிலுக்கு வெளியே சாலையோரத்தில் நின்று மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல்கிவருகிறது.