மகிழ்ச்சி செய்தி... ₹30 லட்சம் வரை வாரி வழங்கும் தமிழக அரசு..! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?.. இதோ முழுவிபரம்..!!!
சிறுபான்மையின மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் பல்வேறு கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கைவினைக் கலைஞர்கள், சிறுதொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.30 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினைக் கலைஞர்கள் தங்களுக்குத் தேவையான கருவிகள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்காக இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Govt Schemes: ரூ.10 லட்சம் வரை கடன்.. பெண்களுக்கு ஜாக்பாட்... முழு விபரம் இதோ.!
யார் விண்ணப்பிக்கலாம்?
கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சியர்கள் மற்றும் சமணர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் இரண்டு பிரிவுகளாக செயல்படுத்தப்படுகின்றன. திட்டம்-1-ன் கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். திட்டம்-2-ன் கீழ் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்கள் பயன்பெறலாம்.
ரூ.30 லட்சம் வரை கடன்
கைவினைக் கலைஞர்கள் பெறும் தனிநபர் கடனுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதமும் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும்.
வணிகக் கடன்களுக்கு திட்டம்-1-ன் கீழ் 6 சதவீத வட்டியிலும், திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும் பெண்களுக்கு 6 சதவீதமும் வட்டியிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் திட்டம்-1-ன் கீழ் 3 சதவீத வட்டியும், திட்டம்-2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதமும் மாணவிகளுக்கு 5 சதவீதமும் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள் என்ன?
விண்ணப்பதாரர்கள் சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ் மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக கடன் பெற விரும்புவோர் திட்ட அறிக்கையையும் இணைக்க வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வி நிறுவனத்தின் அசல் போனாஃபைட் சான்றிதழ், கட்டண ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: TN Govt Schemes: திருமணமாகாத ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம்.. தமிழக அரசின் திட்டம்.!